Author: வா.மணிகண்டன்
•Friday, November 20, 2009
நீண்ட நாட்களாக இருந்து வந்த வலைப்பதிவின் வடிவத்தை மாற்றியாகிவிட்டது.

மாற்றிவிட்டு பார்க்கும் போது வெயிலில் அலைந்து கசங்கியவன் வெதுவெதுப்பான வெந்நீரில் குளித்துவிட்டு வருவதை போல இதமாக இருக்கிறது.

இது ரசனையும் அழகியலும் சார்ந்த விஷயம். அழகு என்பதன் வரையறை கூடவும் ஆளுக்குத் தகுந்தவாறுதானே?."பொண்ணு வெள்ளையா பளிச்சுன்னு வேணும்" என்று சொல்வதில் கூடவும் அரசியல் இருக்கிறது. மரங்களும், உதிரும் மலர்களும் அழகு என்று நினைத்து வடிவமைத்திருக்கிறேன். கற்பனாவாதம் என்றும் சொல்லலாம்.

அதைப் பற்றி எல்லாம் யோசிக்கவில்லை.

இலவசமாக கிடைத்த வடிவமைப்பில், இதுதான் கண்ணுக்கு பிடித்ததாகவும், எளிமையாகவும், டெக்னிக்கலாக பிரச்சினை செய்யாததாகவும் இருந்தது.
====
ஒரு வலைப்பதிவில் "பின்னூட்டமிட்டால் அதற்கு பதிலிடும் நல்ல பழக்கத்தை பின் பற்றுங்கள்" என்று அந்த வலைப்பதிவாளருக்கு அறிவுறுத்தியிருந்தார்கள். இது எனக்கான பின்னூட்டம் இல்லை என்றாலும், உறுத்துகிறது.

பெரும்பாலான பின்னூட்டங்களுக்கு பல சமயங்களில் பதிலிடாமல் இருந்திருக்கிறேன். அடிப்படை நாகரிகம் கூட இல்லையோ? பதிலிட வேண்டும். இல்லையென்றால் பின்னூட்ட வசதியை நீக்கிவிடலாம்.

ஒவ்வொருவருக்கும் பதிலிடுவதிலேயே பின்னூட்டத்தின் எண்ணிக்கையை அதிகமாக்கி காட்டாமல் இருந்தால் சரி.
===
இந்த வாரம் சென்னையில் வலைப்பதிவர் சந்திப்பு ஏதும் உண்டா?. இந்த சனி,ஞாயிறு சென்னையில்தான் டேரா. (09663303156) யாரேனும் தெரியப்படுத்தினால் மிக்க மகிழ்ச்சி.
===
உலகப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப்பாதையில் திரும்பிவிட்டதாக சொல்கிறார்கள். பெரும்பாலான ஐடி நிறுவனங்களும், இன்ன பிற தனியார் நிறுவனங்களும் இரண்டாண்டு கால மந்தநிலையைக்காட்டி ஊதிய உயர்வை நிறுத்தி வைத்திருக்கின்றன. இந்திய ஐடி நிறுவனங்கள் இந்தச் சூழலை பயன்படுத்தி உறிஞ்சி எடுக்கின்றன. வேலை போய்விடலாம் என்ற பயத்திலேயே வாய் திறவாமல் செக்கு மாடுகளை விடவும் அதிகமாக, செய்த வேலையையே திரும்பச் செய்யும் ஐடி நண்பர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது.

ஐடி காரனுகளுக்கு சம்பளம் அதிகம், அவர்களால் விலைவாசி உயர்ந்துவிட்டது என்றெல்லாம் போராடி அரசு ஊழியர்கள் 40% ஊதிய உயர்வு என்பதெல்லாம் சாதாரணம் என்ற நிலையை அடைந்துவிட்டார்கள். நல்ல ஊதியமும் பெறுகிறார்கள்.

ஐடிக்காரனும் அரசு ஊழியனும் பெறும் வருமானத்தில் எத்தனை சதவீதம் கூலி வேலை செய்பவனுக்கும், தனியார் மில்லில் வேலை செய்பவனுக்கும் கிடைக்கிறது என்று பார்த்தால் சதவீத அடிப்படையில் பெரும் வித்தியாசம் இருக்கிறது.

இந்த வித்தியாசம் தொடருமானால் வாழ்க்கைத்தரத்தில் பெரும் வித்தியாசங்களை உடைய சமூகங்கள் உருவாகும்.

எப்பொழுதுமே பெரும்பாலான பிரச்சினைகளுக்கு சமூகத்தினுள் நிலவும் வேறுபாடுகளே காரணமாக இருந்திருக்கின்றன.
====
மது கோடா நோட்டுக்களை எண்ணுவதற்கு மட்டும் நான்கு மெஷின்களை வைத்திருந்தாராம். அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியிலும் குடை பிடிப்பான் என்ற கதைதான் இது. சுயேட்சை எம் எல் ஏவாக இருந்து, அடித்த காற்றில் கோபுரம் ஏறி முதல்வரும் ஆகிவிட்ட குப்பை மது கோடா.

கிடைத்ததே சமயம் என்று வாரிச்சுருட்டியிருக்கிறார். பல அரசியல்வாதிகளின் வருமானத்தில் ஒப்பிடும் போது 2500 கோடி என்பது ஜுஜுபி மேட்டர். மற்றவர்களுக்கு எப்படி சிக்காமல் கை வைக்க வேண்டும் என்று தெரிகிறது. மது கோடாவுக்கு தெரியவில்லை.

ஏதோ அறுபதாயிரம் கோடி ஊழல் என்றார்களே. அது எந்த ஊழல்???
Author: வா.மணிகண்டன்
•Thursday, November 19, 2009

காற்றில் மிதந்து வந்த
பாலீத்தின் பை
அறைந்ததில்
இறந்து போனான் ப்ரனீத்

யாரோ பறக்கச் செய்த
பட்டத்தின் கயிறு
சத்யாவின்
கழுத்தை அறுத்திருக்கிறது

தூக்கிலிட்டுக் கொண்டவன்
விஷம் அருந்தியவனை விட
அதிர்ஷ்டசாலி

உறக்கத்தில் இறந்தவனுக்கு
நல்ல சாவு
வாய்த்திருக்கிறது

கழுத்தில் செருகப்பட்ட கத்திகளை
விட
நெஞ்சில் பாய்ந்த கத்திகள்
கருணை மிக்கவை

லாரியில் தலை நசுங்கியவனும்
நீருள் மூழ்கி இறந்தவனும்
மின்சாரம் தாக்கி மறைந்தவனும்
இறுதி மூச்சுக்கு முந்தைய மூச்சில்
நினைத்தவற்றை கவிதைகளாக்கலாம்

கொலை செய்யப்பட்டவர்களும்
நோய்மையில் மரணித்தவர்களும்
அலையும்
தெருக்களில்தான்
குழந்தைகள்
விழுந்து
காயம் பெறுகின்றன

விடுவிக்கப்படாத மரணத்தின்
புதிர்கள்
இறந்தவனின் புதைகுழி மீதும்
எரித்த சாம்பலின் நுனியிலும்
ஒட்டிக் கொள்வதாக சொல்கிறார்கள்.
Author: வா.மணிகண்டன்
•Wednesday, November 11, 2009

காற்றின் வெற்றிரைச்சல்
ரகஸிய
கதைகளைச் சொல்லிக் கடக்கும்
இரவின் வெறுமையில்
பொழிகிறது பேய்மழை

தவளைகளின் ஈரச்சமிக்ஞை
புரிந்த
பிச்சைக்காரி
ஒதுங்கிய
சாராயக்கடை வாசலில்
மெளனமாய் ஒடுங்குகிறது
கருநாயும்

மரங்களின் விசிறலில்
இடம் மாறும்
மழையின் சோடியச் சிதறல்கள்
ஜன்னல் திரையசைவில்
நுழைகின்றன

தனிமையில் கசங்கிக் கிடக்கும்
அவன்
மழையை
ரஸிப்பதில் விருப்பமின்றி
திரும்பிப் படுக்கிறான்

மழைக்கும் அவனுக்குமான
பந்தம் அறுந்துபோனது-
தீராத காமமும்
ஓயாத மழையும்
பொய்
என்று அவள் சொன்னபோது.
Author: வா.மணிகண்டன்
•Tuesday, November 10, 2009

கடந்த ஞாயிறு மாலை நான்கு மணிக்கு எழுத்தாளர் பாவண்ணனை பார்க்கப் போவதாக திட்டம். முன்பே அவரிடம் பேசி வைத்துவிட்டேன். மூன்றரை மணிக்கெல்லாம் அவர் வீடு இருக்கும் அல்சூரை அடைந்துவிட்டேன். ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவர் தூங்கிக் கொண்டிருக்கலாம் என நானாக நினைத்துக் கொண்டு அந்தப் பகுதியில் அனாமத்தாக சுற்றியதில் பெங்களூர் தமிழ்ச் சங்கக் கட்டடம் கண்ணில் பட்டது.

பைந்தமிழ்ப்பாவலர் எனத்தொடங்கி இன்னும் சில அடைமொழிகளுடன் கூடிய பேராசிரியை ஒருவரின் கவிதை நூல் வெளியீட்டு விழா பேனரை வைத்திருந்தார்கள். கட்டத்திற்குள் செல்லலாம் என்ற நினைப்பை தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டியதாகிவிட்டது.

நான்கு மணிக்கு பாவண்ணனை அழைத்தேன். அவர் வீட்டிற்கு நேரெதிர் திசையில் நான் சுற்றிக் கொண்டிருப்பது இருப்பது புரிந்தது. ஆதர்ஷா தியேட்டரை கண்டுபிடித்து இடத்தை நெருங்குவதற்குள் அவர் மழையில் நனைந்தவாறு காத்துக் கொண்டிருந்தார். பிறகு பேசிக் கொண்டிருக்கும் போது சில சமயம் 'வீசிங்' தொந்தரவு இருப்பதாகச் சொன்னார். மழையில் நனைய வைத்தது உள்ளுக்குள் உறுத்தியது.

அவரது மனைவி ஊருக்கு போயிருப்பதாகச் சொல்லி டீயும், ஹால்டிராம்மின் மூங்தாலும் கொடுத்தார். புத்தகக் கண்காட்சி, பிஎஸ்என்எல் போன்ற சாதாரண விஷயங்களை பேசிக் கொண்டிருக்கும் போது அவரது நண்பர் சம்பந்தம் வந்து சேர்ந்தார். இவர் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸில் பணிபுரிகிறார்.

பாவண்ணன் முதலில் எழுதிய சிறுகதை தீபம் இதழில் வெளிவந்தது பற்றியும், மொழி பெயர்ப்புகள் பற்றியும், இன்றைய இளம் கவிஞர்கள் பற்றியும் பேசினார். நான் வழக்கம் போலவே அதிகம் பேசவில்லை. மூன்று பேரும் நான்கு மணி நேரங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.

தகவல் தொடர்பில் நடைபெறும் மாற்றங்கள் பற்றியும் பேசினோம்.

சம்பந்தம் ஒரு சுவாரசியமான அனுபவத்தைச் சொன்னார்.

அவர் தொண்ணூறுகளில் புனேவில் ட்ரெயினிங்கில் இருந்த போது ஒரு அவசரத் தந்தி வந்திருக்கிறது. "periya akka died" என்பது தந்தி. அவரது ஊர் தர்மபுரிக்கு அருகே உள்ள குக்கிராமம். தொலைபேசி வசதி எதுவுமில்லாத அந்தக் காலத்தில் வீட்டை தொடர்பு கொண்டு துக்கம் பற்றி விசாரிக்க முடியவில்லை. இரவோடு இரவாக பேருந்தை பிடித்து பெங்களூருக்கு அடுத்த நாள் மாலை ஐந்தரை மணிக்கு வந்து சேர்ந்திருக்கிறார் . இருபத்து நான்கு மணி நேர பயணத்தில், வரும் வழியெங்கும் அக்கா இறந்ததன் காரணம் என்னவாக இருக்கும் என்னும் புதிர் ஓடிக் கொண்டிருந்திருக்கிறது. யாரிடமும் பேச முடியவில்லை. நான்கு வேளையும் சோறு இல்லை. கைகால் நடுக்கமெடுத்திருக்கிறது.

கிருஷ்ணகிரி, தர்மபுரி என்று பஸ்களை பிடித்து நள்ளிரவு வீட்டை அடைந்த போது வீடு அமைதியாக இருந்திருக்கிறது. ஏன் இவர் பாதியில் வந்தார் என அவர்கள் குழம்பியிருக்கிறார்கள்.

விசாரித்ததில் அவருடைய பெரிய ஆத்தா(periya atha) இறந்ததை மாற்றி பெரிய அக்கா என்று கொடுத்திருக்கிறார்கள். அந்த ஆத்தா இறந்து ஏற்கனவே ஒரு வாரம் ஆகியிருந்ததாம்.

இந்த மாத உயிர்மையில் ஒரு கட்டுரை வந்திருந்தது. பன்றி பிடிக்கும் இரண்டு பேர் பன்றி எந்த இடத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை செல்போனில் பேசிக் கொள்கிறார்கள்.

Author: வா.மணிகண்டன்
•Monday, November 09, 2009
பெங்களூரில் புத்தக திருவிழா தொடங்கியிருக்கிறது.

கிழக்கு பதிப்பகத்தில் இருந்து மின்னஞ்சலும், கூரியரில் ஒரு தபாலும், ஒரு குறுஞ்செய்தியும் அனுப்பியிருந்தார்கள். கண்டோண்ட்மெண்ட் அருகில் இருக்கும் பேலஸ் மைதானம்தான் திருவிழா நடைபெறும் இடம். நிற்க. நானறிந்த வரையில் சென்னையில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் சமயத்தில் நடைபெறும் நிகழ்விற்கு மட்டுமே புத்தகத் திருவிழா என்ற சொல் பொருந்தும். மற்றவை எல்லாம் புத்தகக் கண்காட்சிதான்.

ஞாயிற்றுக்கிழமையின் சாரலில் பேலஸ் மைதானத்திற்கு போய்ச் சேர்ந்தேன். முடிந்தவரையில் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு தனியாக போவதுதான் வழக்கம். நம் விருப்பத்திற்கு சுற்ற முடியும். உடன் வருபவருக்கு பசிக்குமா கால் வலிக்குமா என்பது பற்றி யோசித்துக் கொண்டு இருக்கத் தேவையில்லை.

கேண்டீன் வழியாக நுழைந்தேன். டிக்கெட் இல்லாமல் புத்தகக் கண்காட்சி நடத்தும் பெங்களூர்காரர்கள் நல்லவர்கள் என்று நினைத்துக் கொண்டே ஒரு மசால் தோசையை உள்ளே தள்ளிவிட்டு நகரலாம் என்பது திட்டம். வழக்கமான கண்காட்சிகளைப் போலவே கேண்டீனில் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது.

கண்காட்சியில் பெரும்பாலும் ஆன்மிக புத்தகக் கடைகளாக தென்பட்டன. ரவிசங்கர், சத்குரு, நித்யானந்தர், சச்சிதானந்தர் போன்ற தமிழ் மக்களுக்கு பரிச்சயமான சாமியார்கள் கடை விரித்திருந்தார்கள். இவர்கள் தவிர்த்து ராமகிருஷ்ண மடம் போன்றவர்களும், எனக்கு தெரியாத இன்ன பிற காவிகளும் அதோடு சில இசுலாமிய அமைப்புகளும் கூட்டங்களை இழுத்துக் கொண்டிருந்தார்கள்.

தமிழ் பதிப்பகங்கள் கண்ணில் அதிகம் படவில்லை. ஆனந்தவிகடனில் கூட்டம் அதிகம். அடுத்தபடியாக கிழக்கு பதிப்பகத்தில் கூட்டம் இருந்தது. கடைகளை பார்த்துக் கொண்டே வேகமாக நடந்ததில் திருமகள் பதிப்பகம் தென்பட்டது. இன்னும் சில தமிழ் பதிப்பகங்கள் இருந்தன. ஆனால் நான் போகவில்லை.

சில ஆங்கில புத்தகங்களும், கிழக்கில் ஒரு புத்தகமும் வாங்கிக் கொண்டு, காலச்சுவட்டில் இசை, இளங்கோ கிருஷ்ணன், ஆனந்த் ஆகியோரின் கவிதை தொகுப்புகளும் பா.திருச்செந்தாழையின் சிறுகதை தொகுப்பும் வாங்கி வந்திருக்கிறேன்.

உடனடியாக படிக்கத் துவங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆங்கிலத்தில் குரானும் வாங்கியிருக்கிறேன்.

கடைகள் முடியும் கடைசி வரிசைக்கு சென்ற போது டிக்கெட் வாங்கிக் கொண்டிருந்தார்கள். இப்பொழுதுதான் நான் டிக்கெட் வாங்காமல் உள்ளே நுழைந்துவிட்ட Back door Party என்று உணர்ந்தேன். திரும்ப கேண்டீன் வழியாகவே வெளியேறிவிட்டேன். யாரும் கேட்கவும் இல்லை.

வெளியே வரும் போது, ஒரு பெண் புடவைக்கு அணியும் வெள்ளை ஜாக்கெட்டும் 'லோஓஓஓஓ ஹிப்பில்' கருப்பு பேண்ட்டும் அணிந்திருந்தாள். இரண்டு துணிகளுக்கு இடையேயான இடைவெளி எத்தனை செ.மீட்டரில் இருக்கும் என_______ கோடிட்ட இடத்தை நிரப்புக.

இளைஞர்களும் பெண்களும் இன்ன பிற தாத்தாக்களும் அலேக்காக அவளின் இடுப்பை நோட்டம் விட்டார்கள். நான் பார்க்கவில்லை என்று பொய் சொல்ல வேண்டிய சூழ்நிலைக் கைதியாக இருக்கிறேன்.
Author: வா.மணிகண்டன்
•Monday, November 09, 2009


தற்கொலை செய்து கொண்டவர்கள்
எப்பொழுதும்
நம்மை துரத்தும்படியான
சாயலை
விட்டுச் செல்கிறார்கள்

தினமும்
பன்னிரெண்டு மணி
பேருந்தில்
இறந்து போனவர்கள்
வந்து கொண்டிருக்கிறார்கள்

உறைந்த தலையென
பனிக்கட்டி நினைவுகளில்
புதைந்த
மீளா முகங்களை
எதிர் கொள்ளும்
ஒவ்வொரு கணமும்
அதிர்ந்து
நடுங்குகிறது
உடல்

மறக்கப்பட வேண்டியவர்கள்
எதாவதொரு சாயலில்
ஏதாவதொரு சாலையில்
எதிர்பாராத பொழுதில்
நம்மை கடக்கிறார்கள்

சாயல்களிலிருந்து விடுபடுதல் சுலபமில்லை

சில சாயல்கள் அழ வைக்கின்றன
சில சாயல்கள் பதற வைக்கின்றன
சில சாயல்கள் சாரலில் நனைக்கின்றன

நேற்றும்-
இரத்தச் சகதியோடு
தோண்டப்பட்ட கண்களில்
கடைசி முத்தத்தில்
கசிந்த
உன் கண்களின்
சாயலை பார்க்கிறேன்.

(நண்பர் கென்னிற்கு)
Author: வா.மணிகண்டன்
•Thursday, November 05, 2009
தமிழ் கணிமை ஆர்வலர்கள் வரும் சனிக்கிழமை(நவம்பர் 7,2009) கோவை குமரகுரு கல்லூரியில் சந்தித்து பேசுவதாக நா.கணேசன்* மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

விக்கிப்பீடியா,இணையத் தமிழ், வலைப்பதிவுகள், தமிழ்மணம் முதலிய திரட்டிகள் பற்றி விரிவாக விவாதிக்கிறார்கள். மதியம் 2 மணி முதல் 4 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வில் ஈடுபாடுடைய எவரும் பங்கேற்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலதிக தகவல்கள் நா.கணேசனின் வலைத்தளத்தில் இருக்கிறது.

*நா.கணேசன் நாசாவில் விஞ்ஞானி. தமிழ் கணிமையில் சத்தமில்லாமல் மிக முக்கியமான செயல்பாடுகளில் அவரது உழைப்பு இருக்கும். தமிழ்மணம்,இகலப்பை போன்றவை சிறிய உதாரணங்கள்.
Author: வா.மணிகண்டன்
•Tuesday, November 03, 2009

ஈரோட்டில் இருந்து கோபிச்செட்டிபாளையத்துக்கு இரவில் பேருந்துகள் அதிகமாக இருப்பதில்லை. பெங்களூரில் மாலை ஐந்து மணிக்கு கிளம்பினால் ஒசூரை ஆறரை மணிக்கு அடைந்துவிடலாம். அங்கிருந்து நான்கு மணி நேர பயணத்தில் சேலம், பின்னர் இன்னும் ஒன்றரை மணி நேரம் பயணித்தால் ஈரோடு வரும். பன்னிரெண்டு மணிக்கு ஈரோட்டில் இருந்தால் பன்னிரெண்டரை மணிக்கு கோபி செல்ல ஒரு பேருந்து இருக்கிறது.அடுத்ததாக இரவு 1.25 க்கு ஒரு பேருந்து. அதையும் விட்டால் இரண்டே முக்காலுக்குத்தான் அடுத்த பஸ்.

இந்தவாரம் 1.25 மணி பேருந்தை ஈரோட்டில் பிடித்துவிட்டேன். போக்குவரத்து கழகத்தில் பயணச்சீட்டுக்கான தொகையை யார் நிர்ணயிக்கிறார்கள் என்று தெரிவதில்லை. ஒரு சில நாட்கள் ஈரோட்டிலிருந்து கோபிக்கு பத்து ரூபாய் டிக்கெட் தருவார்கள், சில நாட்கள் பன்னிரெண்டு ரூபாய்கள். இரவு சர்வீஸ் என்பதால் இரண்டு ரூபாய் அதிகம் என்று நடத்துனர் யாராவது ஒருவருக்கு பதில் சொல்லுவார். மற்றவர்களும் அந்த பதிலில் அமைதியாகி விட வேண்டும். யாராவது கேள்வி கேட்டால் "இப்பத்தான சொன்னேன் நைட் சர்வீஸ்ன்னு. எத்தனை தடவ சொல்றது" என்பார்.

பேருந்தின் கடைசி வரிசையில் ஆரம்பித்து முன் வரிசை நோக்கி டிக்கெட் கொடுத்து வந்த நடத்துனர், ஐந்தாவது வரிசையில் சன்னலோரமாக சாய்ந்து அமர்ந்திருந்த எனக்கு டிக்கட் கொடுத்து முடித்த நான்காவது நிமிடத்தில் முன்புறமாக ஒரு பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இரண்டு ரூபாயை எப்படி அதிகம் வசூலிக்கலாம் என்பதாக அந்தப் பெண் ஆரம்பித்தார். அவர்களுக்கிடையேயான சம்பாஷணையின் முதல் ஓரிரு வாக்கியங்களை தூக்கக் கலக்கத்தில் தவறவிட்டிருந்தேன்.

கேள்விகேட்ட பெண்ணின் வேகமும், பதில் சொல்ல முடியாத நடத்துனரின் சமாளிப்பான பதில்களும் பஸ்ஸிலிருந்த பலரையும் விழிக்கச் செய்தன. மூன்றாவது வரிசையிலிருந்த ஒரு ஆஜானுபாகுவான மனிதரொருவர், நடத்துனரின் சார்பாக பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு "எல்லோரும் பணம் கொடுக்கும் போது உனக்கு மட்டும் என்ன வந்தது" என்றார்.

அந்தப்பெண்மணி "இது நடத்துனருக்கும் எனக்கும் இடையேயான பேச்சு. நீ ஏன் இடையில் பேசுகிறாய்?" என்றார். பேச்சு வார்த்தை நீ, நான் என்ற ஒருமையில் நீண்டது. இப்பொழுது அந்தப் பெண்மணியிடமிருந்து நடத்துனர் தப்பித்துவிட்டார். சண்டை ஆஜானுபாகுவுக்கும், பெண்மணிக்கும் இடையே நகர்ந்து மற்றவர்களை தூங்கவிடாமல் செய்து கொண்டிருந்தது.

கொஞ்சநேர அமைதிக்கு(கொஞ்ச நேரம் என்பது அதிகமில்லை, மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் இருக்கலாம்) பின்னர் திடீரென்று அந்த ஆஜானுபாகு உரத்தகுரலில், "பாரத் மாதா கி ஜேன்னு சொல்லிடுவேன்", "ஹமாரா ஹிந்துஸ்தானி தேஷ்..சலோன்னு சொல்லிடுவேன், தெரியுமா?" என்றார்.

எனக்குசிரிப்பு வந்துவிட்டது. எங்கள் ஊரில் ஹிந்தி அறிந்தவர்களை பார்ப்பது மிக அரிது. இந்த ஆள் ஏதோ இரண்டு வரிகளை தெரிந்து கொண்டு அந்தப் பெண்ணிடம் உதார் விடுகிறார் என்று நினைத்து சிரித்துக் கொண்டிருந்தேன். உண்மையைச் சொல்லப்போனால், நான் ஓரிரு ஊர்களைச் சுற்றி ஓரிரு மொழிகள் தெரிந்த மேதாவி என்ற நினைப்பில் அமர்ந்திருந்தேன்; இப்படி ஒரு நினைப்பிருக்கும் போது அடுத்தவரின் அசட்டுத்தனத்தைப் பார்த்தால் தெனாவெட்டாக உதட்டைச் சுழித்து ஒரு சிரிப்பை உதிர்ப்போம் அல்லவா? அந்தச் சிரிப்பை உதிர்த்தேன்.

அந்தப்பெண் அந்த ஆளின் ஹிந்தி உதாருக்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார். திடீரென்று அந்த ஆள் எழுந்து அந்தப் பெண்ணின் அருகில் சென்றார். இப்பொழுது அந்தப் பெண்ணை அடக்கிவிட்டதான மமதை அந்த ஆளிடம் இருந்தது. "கோபியில தான இறங்குவ? ஊட்ல அண்ணன் என்ன வேலை பண்ணுறாரு? கோபியில எறங்கு..பார்த்துக்கலாம்" என்றார். நள்ளிரவில் ஒரு ஆணின் மிரட்டலுக்கு ஆளான அந்தப் பெண்ணின் மீது எனக்கு பரிதாபம் வந்திருந்தது. எழுந்து ஏதாவது அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் பஸ்ஸிலிருந்த மற்றவர்களின் மெளனம் என்னை கொஞ்சம் தயங்கச் செய்தது.

அடுத்தவினாடி பேருந்தில் ஒரு பேரிடி இடித்தது போல அந்தப் பெண்ணின் குரல் ஓங்கியது. "என்னய்யா செய்வ? நான் கோபி, சத்தி(சத்தியமங்கலத்தை சத்தி என்பார்கள்) மட்டுமில்ல, மெட்ராஸ் பெங்களூர் வரைக்கும் பார்த்தவ. உன்ன மாதிரி தறுதலைகள பார்த்து பயந்துட்டு இருப்பேனா? ராத்திரி மணி ஒண்ணாகுது. ஒருத்தி தனியா வர்றான்னா அவளைப்பார்த்தா தெரிய வேண்டாமா? உன்ன மாதிரி எத்தன பேரு வந்தாலும் ஒரு கை பார்ப்பான்னு.... சும்மா எல்லா பொம்பளையாலும் இப்படி தனியா வர முடியாது. மூடிகிட்டு உட்காரு."

அந்த ஆள் இடையில் பேசத் துவங்கிய போதெல்லாம் அந்தப் பெண்மணி சில கூரிய சொற்களை தன் குரலை உயர்த்திச் சொன்ன போது அந்த ஆள் அவமானம் அடைவதாலோ அல்லது வேறு காரணத்தினாலோ அமைதியாக வேண்டியிருந்தது.

எனக்கு சந்தோஷமாக இருந்தது. தன்இருக்கையில் இருந்து அந்தப் பெண் எழுந்து கொண்டார். தன் கழுத்தில் கறுப்புத் துணியைச் சுற்றியிருந்தார். நெற்றியில் பொட்டு இல்லை. இந்த ஆஜானுபாகு ஒரு மங்கிய காவி வேட்டியை அணிந்திருந்தார். இப்பொழுது எனக்கு அந்த ஆள் முன்பு பயன்படுத்திய இரு ஹிந்தி வாக்கியங்களின் கொடூர அர்த்தம் புரிந்தது.

அந்த ஆஜானுபாகு சொன்னதன் உள்ளர்த்தம் "இந்த தேசத்தில் இசுலாமியர்கள் யாரும் இருக்கக் கூடாது. பாரத் மாதா கி ஜே என்பது பாரத தேவியை புகழ்கிறதோ இல்லையோ இசுலாமியனை இழிவு படுத்துகிறது".இப்படியான பிம்பம் இங்கு உருவாக்கப்பட்டிருக்கிறது.

மிகக்குரூரமான வக்கிர சிந்தனையுடைய இந்து அடிப்படைவாதிகளின் கைங்கர்யத்தால் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இசுலாமியர்கள் மீதான இத்தகைய சில்லறைத்தனமான தாக்குதல்கள் வட இந்தியாவிலும், தென்னகத்தில் ஹைதராபாத் வரையிலும் நிகழ்த்தப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் கோபி போன்ற, இன்னமும் கிராமச் சாயல் மாறாத தமிழகத்தின் உட்புறத்தில் இருக்கும் சிறு நகரத்தில், அதுவும் நள்ளிரவில் தனித்த பயணத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் மீதான மத வெறியுடன் கூடிய சொற்தாக்குதலை எதிர்பார்த்திருக்கவில்லை. மிக அதிர்ச்சியாக இருந்தது.

மதரீதியான விஷம் ஊடுருவிக் கொண்டிருக்கும் இந்த தேசத்தில் அரை வேக்காடான மதவாதிகளின் தூபங்கள், நகரங்களை விட கிராமங்களில் ஆழமாக கால்பதிக்கிறது. தனது மத நம்பிக்கைகள் குறித்தான முழுமையான புரிதலைக் கொண்டிருப்பவர்கள் அடுத்த மதத்தினரின் மீதான் வன்முறையை தேர்ந்தெடுப்பதில்லை. ஆனால் அரைகுறையான நம்பிக்கையும் புரிந்துணர்வும் கொண்டிருக்கும் நபர்களிடத்தில், அதுவும் எளிதில் உணர்ச்சிவயப்படக்கூடிய கிராமத்தின் மக்களிடம் அடுத்த மதத்தின் மீதான தாக்குதலே உங்கள் மதம் மீதான உங்களின் விசுவாசம் என்ற ரீதியில் வக்கிர சிந்தனைகளை மதவாதிகளால் எளிதில் பரப்ப முடிகிறது.

குறிப்பிட்ட ஒரு மதத்தினர் மட்டும் குற்றங்களைப் புரிவதில்லை. இசுலாமியர்களிலும் பாகிஸ்தான் மீதாக பிரியம் உள்ளவர்களைக் காண முடிகிறது. பாகிஸ்தானின் பெரும்பான்மை மதம் இசுலாம் என்ற நம்பிக்கை மட்டுமே இந்திய முஸ்லீம்களில் சிலரை பாகிஸ்தானோடு பிணைக்கிறது. பாகிஸ்தானில் உள்ள மக்கள் தொகையைக் காட்டிலும் இந்தியாவில் உள்ள இசுலாமியர்களின் எண்ணிக்கை அதிகம் என்ற உண்மையை அவர்கள் உணர்ந்திருப்பதில்லை.

மதம் என்பதன் அடிப்படையைக் கூட உணர்ந்திராத ஆதிதிராவிட குடும்பத்துக்கு பணம் கொடுத்து , ஞானஸ்நானம் செய்து தன் ஆண்டவனுக்கு விசுவாசமாக இருக்கும் சில கிறிஸ்தவர்களின் மதவெறியும் எந்த விதத்திலும் சளைத்ததில்லை.

தேச ஒற்றுமை, மத நல்லிணக்கம் என்ற புனிதபிம்பங்கள் எல்லாம் வைத்து ஜல்லியடிக்க விரும்பவில்லை. மதங்களின் பெயரால் சாமானியர்கள் மீதாக நிகழ்த்தப்படும் வன்முறைகள் பற்றித்தான் இங்கு பேச நினைப்பது.

ஆனால் இதையெல்லாம் புலம்புவதால் ஒன்றும் மாறிவிடப் போவதில்லை என்பதால் அந்த பஸ் சம்பவத்துக்கு வந்துவிடலாம்.

நேரம் ஆக ஆக அந்தப் பெண்ணின் ப்ளட் பிரஷர் அதிகம் ஆகி இருக்க வேண்டும். அவரது வார்த்தைகள் நடுங்கத் துவங்கின. பொதுவில் பேசத் தகாத சில சொற்களை அநாயாசமாக தெறிக்கச் செய்தார். இப்பொழுது அந்த ஆஜானுபாகு பரிதாபமாகியிருந்தார். பஸ்ஸில் சிலர் அந்தப் பெண்ணை சமாதானப்படுத்த முயன்றனர். அவர் அமைதியாவதாயில்லை. டிரைவரும் நடத்துனரும் தங்கள் செயலில் லயித்தனர். பஸ்ஸில் சிலர் உறங்கத் துவங்கினர். கொஞ்சம் பெரியவன் ஆன பிறகு பெண்கள் உபயோகிக்கும் கெட்டவார்த்தைகளை நான் கேட்க முடிவதில்லை என்பதால், இந்தச் சந்தர்ப்பத்தில் அவற்றைக் கேட்க விரும்பி காதைக் கூராக்கினேன். ஓரிரு வார்த்தைகள் காதுகளை நிரப்பின. அதற்குள் கோபி பஸ் நிலையம் வந்துவிட்டது. மணி மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது.

இனி நான் பஸ்ஸிருந்து இறங்கி கரட்டடிபாளையத்துக்குச் செல்ல ஆட்டோக்காரருடன் பேரம் பேச வேண்டும்.

நன்றி: உயிரோசை 02/11/2009.


Author: வா.மணிகண்டன்
•Thursday, October 29, 2009

பாதியில் கலைக்கப்பட்ட கனவுகளைச் சேமித்து வைக்கிறீர்கள்
உறக்கத்தில் புன்னகைகளை மீதம் வைக்கிறீர்கள்
யாரும் கேட்டிராத நள்ளிரவின் ஓசையில் திடுக்கிடுகிறீர்கள்
தனிமையின் நிசப்தத்தில் நீங்கள் அதிர்வுறுகிறீர்கள்.

மரணம்
ரசித்துக் கொண்டிருக்கிறது.

நிதானமாக.
=============

இந்தக் கவிதையோடு இணைக்கப்பட்ட இந்தப் படம் யதேச்சையாக கிடைத்தது. துக்கத்தோடு கலந்த நகைச்சுவை. நகைச்சுவையில் எப்பவும் மெல்லிய துக்கம் இழையோடும் என்று எப்பவோ படித்த ஞாபகம்.
Author: வா.மணிகண்டன்
•Monday, October 26, 2009

சேலம் மாவட்டம் சங்ககிரியில் கட்டப்பட்டிருக்கும் அண்ணா நூற்றாண்டுவிழா பேருந்து நிலையத்தை துவக்கி வைக்க துணை முதல்வர் ஸ்டாலின் வருகிறார்.

ஈரோடு-சேலம் சாலையின் நடுநாயகமாக இருக்கும் முக்கியமான ஊர் சங்ககிரி. (சங்கு வடிவ கிரி?). ஊருக்கு இரண்டு பக்கமுகாக இரண்டடிக்கு ஒன்றாக, தோராயமாக பத்துக் கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையின் இருபுறங்களும் டியூப்லைட்கள் கட்டி, சங்ககிரியிலிருந்து சேலம் வரைக்குமான முப்பத்தி சொச்சம் கிலோமீட்டர்களும் கொடி தோரணங்களும், பேனர்களுமாக தங்கள் பராக்கிரமத்தை காட்டியிருக்கிறார்கள் சேலத்துக் கண்மணி்கள்.

நேற்று பெங்களூருக்கு பேருந்தில் வரும் போது எனக்கு ஓரிரண்டு சந்தேகங்கள் வந்தன.

1. இத்தனை டியூப்லைட்களுக்கும் யார் எலெக்ட்ரிக் பில் கட்டுவார்கள்?

2. இருபக்கமும் இருக்கும் ஆயிரக்கணக்கான விளக்குகள், இலட்சக்கணக்கான பேனர்கள், கோடிக்கணக்கான கொடி தோரணங்களை ஸ்டாலின் விரும்புகிறாரா? இல்லை கழகத்தினர் அவர் பேச்சையும் கேட்காமல் செய்கிறார்களா?

3. வீரபாண்டியார், ஸ்டாலினுக்கு எதிரான செயல்பாடுகளை நடத்துபவர் என்று சில நாட்கள் முன்பு வரைக்கும் செய்திகளில் படித்திருக்கிறேன். வீரபாண்டியாரின் கோட்டை என்று பேசப்படும் சேலத்தில் ஸ்டாலினுக்கு ஏன் இவ்வளவு பிரம்மாண்டமான வரவேற்பு தருகிறார். மாறிவிட்டாரா?

==========

நேற்று எங்கள் ஊரில் சில ரத்தத்தின் ரத்தங்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது, அவர்கள் நம்புவதாக நான் உணர்ந்தது.

1. இத்தனை இலவச திட்டங்களும் நிச்சயமாக இன்னும் ஒரு தேர்தலுக்கு திமுக வின் வெற்றியை உறுதிப்படுத்துகின்றன.

2. டாஸ்மாக் வருமானமே இத்தனை கோடிகளை இலவச திட்டங்களில்செலவழிக்கும் தைரியத்தை அரசாங்கத்திற்கு கொடுக்கின்றன. (சரியா?)

என் சித்தப்பாவுக்கு ஒரு சந்தேகம், அந்த சந்தேகம் முந்தைய கேள்விக்கு பதில் கொடுக்கலாம்.

பால் விலை, பஸ் டிக்கெட் விலை உயர்வுக்கு எல்லாம் போராட்டங்கள் நடக்கின்றன. தீபாவளி சமயத்தில் 110 ரூபாய் சரக்கு 140 ரூபாய்க்கு விற்ற போதும் எந்த குடிமகனும் பிரச்சினை செய்ததாக தெரியவில்லை. ஏன்?

=====

விவசாயக் கூலிகளுக்கு ஆண்டுக்கு நூறு நாட்கள் வேலை வாய்ப்பு தரும் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. வருடத்தில் நூறு நாட்களுக்கான வேலை வாய்ப்பைத் தரும் அரசாங்கமே தினக்கூலிகளுக்கான கூலியை கொடுக்கும். கிணறு வெட்டுதல், குளம் தூர் வாருதல் போன்ற பணிகளை இத்திட்டத்தின் மூலமாக செய்வார்கள்.

இந்தத் திட்டத்தில் அரசாங்கம் கொடுக்கும் கூலியானது, இன்றைய நிலையில் தோட்டம், வயல் வேலைகளில் தரப்படும் கூலியை விட பத்து அல்லது இருபது ரூபாய்கள் குறைவு. ஆனால் தொழிலாளர்கள் அரசின் வேலைத்திட்டத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். அடிப்படை காரணங்கள்

1. வேலை நேரம் சொற்பம்
2. வேலை செய்யவில்லை என்றால் கேட்கப்படும் கேள்விகள் குறைவு.

மில் வேலைக்கும், நூல் கம்பெனிகளுக்கும் வேலை தேடி பல பேர் போய்விட்டார்கள். மீதமிருந்த கொஞ்சம் பேரும் இப்படி அரசாங்கத்தின் திட்டத்தால் விவசாய வேலை செய்ய வருவதில்லை. விவசாயம் எப்படி செய்து பிழைப்பது என்ற விவசாயிகளின் புலம்பல் கோபி, பொள்ளாச்சி போன்ற ஊர்களில் அதிகமாகிவிட்டது.

அரசாங்கம் கொஞ்சம் விரிவாக பரிசீலித்தால் நூறு நாட்கள் திட்டத்தை, 365 நாட்கள் திட்டமாக மாற்றிவிடலாம். எண்பது ரூபாய் தருவதற்கு பதிலாக ஐம்பது ரூபாய் தந்து பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.

1. தொழிலாளர்கள் விவசாயிகளின் தோட்டங்களில் வேலை செய்வார்கள். அரசாங்கம் ஐம்பது ரூபாய் கொடுத்துவிடும். தோட்ட உரிமையாளர் ஐம்பது ரூபாய் கொடுப்பார்.

2. இதில் தொழிலாளியின் கூலி அதிகமாகிறது. விவசாயி, தன் தொழிலாளிக்கு கொடுக்க வேண்டிய பணத்தில் ஒரு பகுதியை மிச்சம் செய்யலாம்.

3. அரசாங்கம், தினக்கூலிகள் 365 நாட்களும் வேலை கிடைப்பதை உறுதிப்படுத்தலாம்.

இந்தத் திட்டம் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் சாத்தியமில்லை. நல்ல தண்ணீர் வசதியோடு விவசாயம் செழிக்கும் கொங்கு மண்டலம், காவிரி படுகைகளில் செயல்படுத்தலாம். மற்ற ஊர்களுக்கு வேறு முறைகளை பரிசீலிக்கலாம்.